மானுடம் என்றதுமே, நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப் பிறவிகளே நினைவுக்கு வருகிறது. ‘இதோ, நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம்’ என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப் பிறவிகள், நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை… உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீன பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம், இந்த அப்பாவிகளைப் பார்த்ததுமே சிரிக்கிறோம்… இவர்களைப் பயங்கரப் பிறவிகள் என்று அனுமானித்து ஒதுங்கிக் கொள்கிறோம்.

சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி விகடனில் தொடர்கதையாக வந்த வெளிவந்து கொண்டிருந்தது. அதனுடன் மேலும் சில அத்தியாயங்களை இணைத்து உருவாக்கியது உருவாக்கியதே வாடாமல்லி என்னும் இந்நாவல். முதல் மூன்று அத்தியாயங்களை சமூகப் பொறுப்போடு படித்தால், இதர அத்தியாயங்கள் உங்களை ஈர்த்து விடும். இது, திருநங்ககைளைப் பற்றி மட்டும் எழுதிய நாவல் அல்ல! ஒரு திருநங்ககையைப் பிறப்பித்த பெற்றோர் படும் பாட்டையும், அந்தக் குடும்பம் கெடும் கேட்டையும் சித்திரிக்கும் நாவல்.

குடும்பத்தார் மேல் மிகுந்த பாசம் கொண்ட சுயம்பு இளமையில் திடீரென தன்னுள் பெண்மையை உணரத் தொடங்குகிறான். பெண்களின் உடையின் மேல் மிகுந்த நாட்டம். அவனது நடையில் நாணம் மெல்ல குடியேறுகிறது. அவன் தந்தை வயல் வெளியில் வேலை செய்யும் போது அவரிடம் பலர் அவனைப் பற்றி விசாரிக்கின்றனர். என்ஜினியரிங் படிக்கும் வாலிபன் படிப்பு முடியப் போகும் நேரத்தில் ஏன் படிக்க மாட்டேன் என வீட்டில் வந்து இருக்கிறான் என கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியாது ஆற்றாமையும் ஆதங்கமும் வருகிறது.

அவன் அக்காவை மணமுடிக்க வந்த பையனின் குடும்பத்தினர் இவனைப் பார்த்ததும் மறுக்கின்றனர். திருமணம் தடைப்படுகிறது.
இவன் தங்கையைக் காதலித்தவன் இவனைப் பார்த்ததும் அவளை விட்டு விலகுகிறான். இவனுடைய அண்ணன் மனைவி தன் கணவனிடமும் பெண்மை இருக்கலாம் என தேடத் தொடங்குகிறாள். இப்படி மொத்த குடும்பமும் உதாசீனப் படுத்தும் நேரத்தில் தான் தாய் “தன் வயிற்றில் பிறந்தது ஒரு பசுவே ஆனாலும் அது என் பிள்ளை தானடா உன் உடன் பிறப்பு தான் ” எனத் தன் மூத்த மகனிடம் வாதாடுகிறாள்.

இத்தனைக்கும் நடுவில் வீட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்ட சுயம்புவை ஒரு அரவாணி அரவணைத்து தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறாள். வாடாமல்லி நாவல் இரண்டு பாகங்களாக இருக்கிறது. முதல் பகுதி இதோடு முடிய இரண்டாம் பாகம் தொடர்கிறது.

டேவிட் என்னும் மருத்துவ மாணவர் தன் நண்பர்களோடு சுயம்புவின் குடும்பத்தாரை பார்க்க வருகிறார். திரு நங்கைகளின் பிறப்பு பற்றி மிக அழகான ஒரு விளக்கம் தருகிறார். மற்ற சீவ ராசிகளைப் போல குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் இனச் சேர்க்கை செய்பவன் அல்ல மனிதன். இவனுக்கு எக்காலமும் சம்மதமே! இன விருத்திப் பெருக்கத்தை இயற்கை ஒரு கட்டுக்குள் வைக்க விரும்புகிறது. இதற்காக பிறந்தவர்கள் இவர்கள்.

டெல்லிக்கு தப்பிச் செல்லும் சுயம்பு அங்கேயுள்ள திருநங்கைகளோடு சேர்ந்து கொள்ள சுயம்புவின் டெல்லி வாழ்க்கை கதையாகச் செல்கிறது. அவர்களுக்கு டீவியில் தங்களைப் பற்றி பேசி உலகம் அறியச் செய்ய வேண்டுமென ஆசை இருக்கிறது. அதை அறிந்த சுயம்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அதை நிறைவேற்றித் தர அவர்களின் குருவான கங்கா தேவி சுயம்புவைத் தன் மகளாகத் தத்தெடுக்கிறாள். சுயம்புவுக்கு குரு திருநங்கையாகும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லி அவன் ஆணுறுப்பை நீக்கும் சடங்கை பற்றி வாசிக்கும் போது நெஞ்சு பதறுகிறது.

முழுப் பெண்ணான சேலா திருநங்கைகளில் யாரையும் தத்தெடுக்காமல் உன்னை தத்து எடுத்தால் நம் சமுதாயம் என்னை மதிக்காது. நம் சமூகத்தில் வெட்டுப்படாதவங்க வெட்டுப்பட்டவங்களை விட ஒரு படி தாழ்த்தி. லுங்கி கட்டறவங்க சேலை கட்டறவங்களை விட அந்தஸ்தில் சின்னவங்க. என்று சுயம்புவை சமாதானம் செய்கிறார் குரு கங்கா தேவி. இடையில் ஒரு முறை தன் வீட்டுக்குச் செல்லும் சுயம்புவை குடும்பத்தார் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் திரு நங்கை சமூகத்துக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள் கண் முன் நிற்க முன்னெடுத்துச் செல்கிறாள் சுயம்பு.

இந்நாவலின் ஆசிரியர் சு. சமுத்திரம் கதை எழுதிய காலத்தில் திருநங்கை என்ற சொல்லாடல் இல்லை. அதனால் “அலி” என்றே எழுதி இருக்கிறார். அதை தவறென்று சொல்ல முடியாது.

Read/Download this PDF Book

Read/Download this PDF Book