புத்தரின் இயற்பெயர் சித்தார்த். மிக இளம் வயதிலேயே யசோதாவை மணம் செய்துகொண்டார். இராகுலன் என்ற மகனும் பிறந்தான். அந்தச் சமயத்தில்தான் அவரது சிந்தனையில் தீவிரமான மாற்றம் நிகழ்ந்தது. மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் இடர்களால் துயரம் உண்டாகிறது; எனினும் தவிர்க்க முடிந்தவையாக அவருக்குத் தோன்றின. பழங்குடியின மக்கள் தங்களது இன மரபுகளிலிருந்து மாறிவிட்டனர்; சமவெளிகளில் குடியமரத் தொடங்கினர். வளர்ந்து கொண்டிருந்த பேரரசுகள் இதனால் அச்சம் கொண்டன. எதிர்வினையாகப் பேரரசர்கள் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களைக் கொடூரமான யுத்தங்களில் கொன்றனர். அந்தப் பழங்குடியின மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தவும், அடக்கியாளவும் பிராமண அமைச்சர்கள் திட்டங்கள் தீட்டித் தந்தனர்.” கௌதமரைப் பெருமளவிற்குத் தொந்தரவு செய்த கேள்வி இதுதான்: யுத்தங்களைத் தவிர்க்க முடியாதா?

அவரை வேதனைக்குள்ளாக்கிய இரண்டாவது அவலமான சூழல், லட்சக்கணக்கில் மக்கள் கொள்ளை நோய்களில் மடிந்தது. கொள்ளை நோய்களால் ஏற்படும் சாவைத் தடுக்க முடியாதா? என்ற கேள்வியும் அவருக்குள் எழுந்தது. அவரை உறுத்திய மூன்றாவது விஷயம் உணவுப் பஞ்சத்தால் அக்காலத்தில் நிகழ்ந்த பெருமளவிலான பட்டினிச்சாவு. காடுகளின் வளம் பெருமளவிற்குக் குறைந்துபோனது. மக்களது தேவைகளை ஈடுசெய்யும் வகையில் வேளாண் விளைச்சல் பெருகவில்லை. அவரை வேதனைப் படுத்திய இறுதிப் பிரச்சனை, வளர்ச்சி அடைவது எப்படி என்ற விடை தெரியாக் கேள்வி.

இவை தவிர்த்து, மரபுவழி வரலாறு சொல்வதுபோல், நோயால், முதுமையால், மனநோய் போன்றவற்றால் மனிதர்கள் அடையும் துயரங்களையும் அவர் நேரிடையாகப் பார்த்தார். ஆனால், அரசால் உண்டாகும் பிரச்சனைகளுக்கும் சமுதாய பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அரச வாழ்வைத் துறப்பதற்கு அவருக்கு இவை மட்டுமே போதுமான காரணங்களாக இருந்திருக்க முடியாது.

இளவரசனாக அரசு நிர்வாகத்தின் கடிவாளத்தைக் கையில் எடுப்பதா? அல்லது வேறொரு தீவிரமான செயலுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வதா? கடும் மன உளைச்சலுக்குப் பிறகு புத்தர் அப்போது எடுத்த முடிவு மிக முக்கியமானது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், ஆள்பவன் தனது முடியரசைப் பாதுகாக்கவும் வலிமைப்படுத்தவும் தேவையான அனைத்தையும் செய்யவேண்டும். அரசைப் பராமரிக்கவும் விரிவாக்கவும் யுத்தங்கள் தவிர்க்க முடியாதவை. சாக்கியர்களுடன் நேரடிப் போட்டியிலிருந்த வேறு பல அரசுகள் இந்த அடிப்படையில் தம்மை விஸ்தரித்துக் கொண்டன. மகத அரசு மேலும் மேலும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டது. அந்தக் காலத்தில், மெய்ஞானம் பெறவும், இறைசக்தி பெறவும் துறவு மேற்கொள்வது பொதுவான வழிமுறையாக இருந்தது. முனிவர்களும் ரிஷிகளும் சமூகத்தில் பெரும் அந்தஸ்தையும் மரியாதையையும் பெற்றிருந்தனர். ஆகவே புத்தரும், பெரும்பான்மை மக்கள் அந்த நாட்களில் சந்தித்த பெரும் பிரச்சனைகளுக்கான தீர்வை கண்டறியத் தேவையான ஞானத்தைப் பெற நினைத்தார். அதனைத் தேடித் திரிந்து அடைவதற்கு உதவியாக இளவரசுப் பட்டத்தைத் துறப்பதற்கு முடிவு செய்தார்.

அடுத்ததாக வீட்டை விட்டு அவர் எப்படி வெளியேறினார் என்பதை ஓல்டென்பெர்க் விவரிக்கிறார்: விரைந்து வெளியேற எண்ணியவருக்கு புதிய வரவான மகனின் நினைவு வந்தது. குழந்தையைப் பார்க்கவேண்டும். மனைவி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் சென்றார். தரையில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில், குழந்தையின் தலையில் கைவிரல்கள் பட்டுக்கொண்டிருக்க அவள் படுத்திருந்தாள். திடீரென்று அவருக்குத் தோன்றியது. குழந்தையை அணைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி மனைவியின் கையை நகர்த்தினால், அவள் விழித்து கொள்ளக்கூடும். எனவே ஞானம் பெற்ற பின் நான் இங்கு திரும்பி வருவேன். எனது மகனைப் பார்ப்பேன்.

புத்தர் இளம் வயதில், இளமையின் மலர்ச்சியில், வாழ்க்கையின் முதல் புத்துணர்வுப் பருவத்தில் இருக்கும்போது அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரது பெற்றோர்கள் இதனை விரும்பவில்லை. கண்ணீர் சிந்தினர், கதறி அழுதனர். துறவுநிலைக்குச் சென்ற புத்தர் தலையையும், முகத்தையும் மழித்து கொண்டார். மஞ்சள் நிற ஆடையணிந்தார். வீட்டைத் துறந்து வெளியேறினார். வீட்டைவிட்டு வெளியேறிய நாளிலிருந்து மனநிம்மதியற்று அலைந்தார். இத்தனை ஆண்டுகளும் அவரைத் தொந்தரவு செய்துகொண்டிருந்த பிரச்சனைகள் குறித்துச் சிந்தித்தார்.

Read/Download this PDF Book