ஒரு கதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே பஞ்சதந்திர கதைகள் சிறந்ததுமாகும். இக் கதையின் கதபாத்திரங்கள் பெரும்பான்மையாக மிருகங்கள் அல்லது பறவைகளாகவே இருக்கின்றன. இருப்பினும் இக்கதபாத்திரங்கள் கதைக்குச் சுவையூட்டுவதாகவே இருக்கின்றன. பஞ்ச தந்திரக் கதைகள் பொழுது போக்குக் அம்சங்களை கொண்டிருந்தாலும், இந்தக் கதைகள் அனைத்தும் அரசியற் சூழ்ச்சியின் ஏதாவது ஒரு விளக்கத்தை தருவதாகவே இருக்கிறது.

விஷ்ணு சர்மா என்ற பண்டிதர் அமர சக்தி மன்னனின் முன்று குமாரர்களையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு எளிதாகவும், மனதை கவரும் வகையிலும், சுவையாகவும் சொன்ன கதைகளே பஞ்சதந்திர கதைகள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் கதைகள் மூலமாக ஆறு மாதங்களுக்குள் முன்று அரச குமாரர்களுக்கும் அரசியல் உத்திகளையும், இரகசியங்களையும் சொல்லிக் கொடுத்து, அரசியலில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்களை அனுப்பி வைத்தார்.

காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி எவன் ஒருவன் தன் அறிவை பயன்படுத்தி எடுத்த செயலை சிறப்புற வெற்றி பெற்று முடிப்பான் என்பதுதான் பஞ்சதந்திர கதைகள் அமைந்துள்ள மூல கருத்தாகும். இக்கதைத் தொகுப்பில் மொத்தம் ஐந்து பாகங்கள் உள்ளன. ஐந்து பாகங்களிலும் மொத்தமாக 57 கதைகள் உள்ளன. ஒரு பாகத்தில் வரும் முதல் கதை தான் முக்கிய கதையாகும் ஏனைய கதைகள் அந்த முதல் கதைக்கு வரும் துணைக் கதைகளாக உள்ளன.

நரி காளை மாட்டை கோபப்படுத்த சொல்லிய உபதேச கதைகள்.

யானையின் வெறியை அங்குசத்தால் அடக்கலாம். வெயிலின் கொடுமையை விசிறியால் தணிக்கலாம். அற்பர்களின் வெறியை அடக்க மட்டும் வழி இல்லை. அவர்கள் செத்தால்தான் அது அவர்களோடு சேர்ந்து அழியும்.

பூவில் இருக்கும் தேனை உண்டு இன்பமாக வாழ்வதை விட்டு, யானையின் மத நீரை உண்ண போய் அதன் முறம் போன்ற காதினால் அடிபட்டுச் சாகும் வண்டு. அதுபோல் நல்லவர்கள் பேச்சை கேட்காமல், தீயவர்கள் சொல்வதைக் கேட்டு ஒழிந்து போவது துடுக்குடுடைய அரசர்களின் தன்மை.

அறிவில்லாதவர்கள், தங்களுக்கிருக்கும் பலத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை சிறியவர்கள் என மதித்து விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் சிட்டுக்குருவியை அற்பம் என்று நினைத்து கடைசியில் கடல் அரசன் தன் வீராப்பு அடங்கியதே போலிருக்கிறது.

Read/Download this PDF Book