இந்தியாவில் பல நகரங்களில் ஆடை உற்பத்தி நடந்தாலும் குறுகிய கால கட்டத்தில் திருப்பூர் என்ற சிறு நகரம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
ஒரு காலத்தில் வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருந்தது திருப்பூர் நகரம். ஆனால் இன்றோ பணமிழந்த பண்ணையார் போல் திணறிக் கொண்டு வருகிறது. “டாலர் நகரம்” என்னும் புத்தகத்தின் வாயிலாக அந்த நகரத்தை பற்றி அக்கு வேறாக பிரித்து நமக்கு காட்டியுள்ளார் ஜோதிஜி. அவரது கைவண்ணத்தால் டாலர் நகரம் என்னும் இந்நூல் மிளிர்கிறது.

திருப்பூர் நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனான ஜோதிஜி மூடுவிழாக் காண இருந்த கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். பின்பு படிப்படியாக அந்த நிறுவனத்தை மேலே கொண்டுவர நிர்வாகத்தில் ஓனரின் மனைவி, மைத்துனருக்குச் சொந்தம் என்ற பெயரில் அட்டைப்பூச்சிகளாக இருந்தவர்களை நீக்கி, இலாபத்தில் கொண்டுவந்து பொழுது, மறுபடியும் ஓனரின் மனைவி உள்ளே நுழைந்து கணக்கு வழக்குகளை பார்க்கிறேன் என்ற பெயரில் நெருக்கடி கொடுத்த கதையை விளக்கமாகச் எழுதியுள்ளார். இறுதியில் அந்த ஓனரின் மனைவியின் சொல்லை மீற முடியாத காரணத்தால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ளார். திருப்பூர் மட்டுமல்ல, அனைத்து ஊர்களிலும் குடும்பத்தினர் தலையீடு என்பது தொழிலை விரிவாக்கவோ, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதைத் தடுப்பதாகவே இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

வாழ்க்கையில் லட்சியம் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அதை அடைவதற்கான வழி. திருப்பூரில் வெற்றிபெற்ற ஒரு தொழிலதிபரின் பேட்டியைப் படிக்கும்போது அதன் பின்னால் முகம் பெயர் தெரியாத 20 தோல்வியடைந்த நபர்களை மனதில் நினைத்துக்கொள்ளலாம். திருப்பூர் உங்களிடம் எதிர்பார்ப்பது உழைப்பு, உழைப்பு, உழைப்பு. ஒருநாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்தே ஆக வேண்டும். மீதமிருக்கும் நேரமும் தொழில் குறித்த எண்ணங்களே மண்டையில் ஏறி ஆட்டிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் மட்டுமே அந்த ஊரில் தாக்குப்பிடித்து ஜெயிக்க முடியும்.

நெய்யும் தொழிலில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் துணிகளுக்கு சாயம் ஏற்றும் போது ஏற்படும் சாயக்கழிவு. அதை சில விஷக் கிருமிகள் நொய்யல் ஆற்றில் கலந்து விடுகிறார்கள். அதில் ZERO DISCHARGE என்ற ஒரு விஷயத்தின் சாத்தியக்கூறுகளை விவரித்துள்ளார்.

தொழில் செய்பவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். பதவி என்பது பெரிய விஷயமல்ல. தொழிலில் திறமையென்பது முக்கியமல்ல. தான் முக்கியமாக தந்திரமும் சமயோசிதமும் தான் தேவைப்படுகிறது. தமது முதுகுக்கு பின்னால் உள்ள துரோகங்களை கூர்மையாக கவனித்து கொண்டே வரவேண்டும்.

நடுத்தர வர்க்கமாய் வாழ ஏதாவதொரு நரகத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பது எவ்வளவு வலி மிகு வார்த்தைகள். கார்ப்பரேட் நிர்வாகத்தில் சமரசத்துக்கு இடமே இல்லை. வாழ்க்கை என்பது எப்போதும் போலத்தான், உருளும் வரையில் இயல்பாக உருண்டு கொண்டேயிருக்கும். பிரச்னை என்று ஒன்று வந்துவிட்டால் நம்மையும் உருட்டித் கீழே தள்ளி விடும். என்று பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியது இன்றைக்கும் பொருந்துகிறது.