படிக்கும் போது இதுபோன்றதொரு கவிதையை நாமும் எழுதிவிடலாம் போலிருக்கே என்ற பிரமையை தோற்றுவித்து, எழுத முற்படும் பொழுது நம் பிடிக்குள் அடங்காமல் நழுவிச் சென்று விடும் ஆற்றல் படைத்ததே சிறந்த கவிதை என்பது அறிஞர்களின் கூற்று.

சமுதாய வீதி என்னும் இந்நாவலும் ஒருவிதத்தில் நமக்கு ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள் இன்றோ, நேற்றோ அல்லது பல நாட்களுக்கு முன்பு நாம் சந்தித்து பேசி பழகி இருப்பது போன்ற ஒரு அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

கவிஞர்களுக்கே உரித்தான கர்வம் கொண்டவன் தான் கதாநாயன் முத்துக்குமரன். சென்னையில் இருந்த பாய்ஸ் நாடகக் கம்பெனியில் முத்துக்குமரன் பெரிய நடிகனாக இருக்கிறான். மாதவி துணை நடிகையாக இருந்து கோபால் சாரின் பழக்கத்தால் கதாநாயகியாக வளர்ந்ததால் அவன் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் விசுவாசி.

முத்துக்குமரன் தான் புதிதாக ஆரம்பிக்கும் நாடகக் கம்பெனிக்கு தன் நண்பனான கோபாலைக நாடகம் எழுதித் தரச் சொல்கிறான். வெளிநாட்டில் நாடகம் போட வேண்டும் என்பதற்காக விடுதியில் தங்கி இருக்கும் மலாய் அப்துல்லா என்ற பணக்காரரை விருந்துக்கு அழைப்பதற்காக மாதவியிடம் நீ மட்டும் தனியே சென்று அவரை அழைத்து வா என்கிறான் கோபால். ஆனால் மாதவியோ தன் காதலனையும் கூட அழைத்துச் செல்கின்றாள்.

நாடகம் நடக்கும் நாள் அன்று கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிகிறது. காட்சி, வசனம், பாடல்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களின் கரவொலியால் முத்துக்குமரனின் தலையை கனக்கவைக்கிறது. முத்துக்குமரனுக்கு அப்துல்லா மாலை போட வந்த போது அவனோ “மாலை வாங்கிக்கொள்வதற்காக சாதாரண மனிதர்கள் முன்பு ஒரு கணம் தலை குனிவதை விரும்பாதவன் நான்” என்று படைப்பின் செருக்கோடு கூறுகிறான்.

மலேசியாவில் அப்துல்லா மாதவியை சுற்றிவர, கோபாலும் ஒத்துபாட, மாதவி ஒதுங்க, ஒருமுறை அப்துல்லா அவளின் கையை பிடித்திழுக்க பிரச்சனை பூதாகரமகிறது. இதன்பிறகு எதிர்பாராத திருப்பங்கள் எதிர்பாரக்கும் விருப்பங்கள் எனகதை மெருகேறி முடிகிறது.

இக்கதையின் நாயகர்களான முத்துக்குமரனும் மாதவியும் மட்டுமே சிறந்தவர்கள் என்று கூறிவிட முடியுமா? இதில் வில்லன் போல் தோன்றச் செய்த கோபால் எவ்வளவு சிறந்த குணச்சித்திர கதாபாத்திரமாக படைக்கப்பட்டுள்ளான். இந்நாவலின் கதை முழுவதும் இன்றைய சமூகத்தின் போலித்தனத்தையும், நகர வாழ்வின் குற்றங்களையும் எடுத்துக் காட்டுவதே நோக்கமாக கொண்டிருப்பினும் எவ்வித விரசமும் இன்றி படிப்பதற்கு சுவையாக உள்ளது இந்நாவல்.

Read/Download this PDF Book