உன் கோபத்துக்காக நீ தண்டிக்கப்படுவதில்லை. உன் கோபத்தாலேயே நீ தண்டிக்கப் படுகிறாய் என்பது புத்தர் வாக்கு. அர்த்தமற்ற விஷயங்களுக்காக காரணமின்றி கோபப்பட்டவர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள்.

சட்டென்று மாறுகிற மனநிலையின் வெளிப்பாடு தான் கோபம். அதன் பின்னணியில் வருத்தும் ஏதோ ஒரு விஷயம் இருக்கலாம். கோபம் என்பது காய்ச்சல் மாதிரி ஓர் அறிகுறி. காய்ச்சல் என்பது எப்படி ஒரு நோய் இல்லையோ, உடலுக்கு உண்டான ஏதோ ஒரு பிரச்சனையின் அறிகுறியோ, அதே போலத்தான் கோபமும். மனதையோ உடலையோ ஒரு விஷயம் உறுத்துகிறது, அதை கவனி என ஒருவரை திசை திருப்புகிற விஷயம் தான் கோபமும்.

இப்படித்தான் ரியாக்ட் செய்வார் என்பது மற்றவர்களுக்கு புரிகிற அளவுக்கு அந்த கேரக்டர் வெளிப்படையாக தெரியத் தொடங்கும். கோபத்தை தான் அவசிய அடையாளமாக ஏற்றுக்கொண்ட ஆண்கள் தன்னை ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி கற்பனை செய்து கொள்வார்கள். ஆதிக்கக் குணம் அதிகம் இருக்கும்.

பெரிதாக எதையாவது எதையாவது சாதிக்க வேண்டும் என்கின்ற தேடலில் இருப்பார்கள். போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியுடன் இருப்பார்கள். கோபத்தை தனக்கான ஆயுதமாகக் கொண்டு, மனைவியிடம் கூட நெருங்கி பழக மாட்டார்கள். மனைவியிடம் அன்பாக இரக்கமாக, கருணையாக பேசினாலே, சிரித்தாலோ தன்னை பலவீனமானவராக நினைத்து விடுவார்களோ என இறுக்கமாகவே, இருக்க முயற்சி செய்வார்கள். தனது பயங்களையோ, பலவீனங்களையோ, தோல்விகளையோ பற்றி வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொள்ள தயங்குவார்கள். இதனால் சில வேளைகளில் அளவுக்கதிகமான மன உளைச்சலில் பாதிக்கப்படுவார்கள். ஆனாலும் துணையிடம் இருந்து விலகியே நிற்பார்கள்.

கோபக்கார ஆண்கள் இப்படி என்றால், கோபக்கார பெண்களோ கோபத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்வார்கள் கணவருடன் மனம் விட்டு பேச மாட்டார்கள். கணவரின் கோபம் அறிந்த மனைவிகள் என்றால் எந்த விஷயம் அவரது கோபத்தை தூண்டும் என தெரிந்து கொண்டு அதை அவரிடமிருந்து மறைப்பார்கள்.

கணவன்-மனைவிக்குள் கோபம் வர காரணங்கள்

  1. தனக்கு மரியாதை இல்லை என உணரும் போதும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிற போதும் கோபப்படுகிறார்கள்.
  2. உடல், மன அளவில் தனது எல்லைகளில் வாழ்க்கைத்துணை தலையிடுவதையோ, அந்த எல்லையை நேர மீற முயற்சிப்பதையோ பொறுத்துக் கொள்ள முடியாத போது கோபப்படுகிறார்கள்.

கோபத்தை கண்டறியும் காரணிகள்

வார்த்தை வன்முறை… கோபமாக பேசுவது, நக்கலாக பேசுவது, வாழ்வில் விட்டுவிட்டு போய் விடுவேன் என மிரட்டலாக பேசுவது, ஆபாசமாக பேசுவது, துணையின் பெற்றோர், உற்றார், உறவினர்களை பற்றி அவதூறாக பேசுவது, பொய் பேசுவது என எல்லாம் இதில் அடக்கம்.

  1. துணைக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறுவது.
  2. எப்போதும், யாரேனும் ஒருவருடன் ஒப்பிட்டு பேசி மட்டம் தட்டுவது.
  3. தன்னுடைய அபிப்பிராயங்களை, கருத்துக்களை துணையின் மேல் திணிப்பது. துணையின் சார்பாக தானே முடிவெடுப்பது.

கோபத்தை தூண்டும் விஷயங்கள்

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தான் என்ன?
ஹார்ட் அட்டாக் வந்து உயிரை உயிரிழப்பவர்களில் சிலர் மனதுக்குள் கோபத்தையும் வருத்தத்தையும் போட்டு புதைத்து வைப்பவர்களே என்கிறது ஒரு ஆய்வு. கோபப்படும்போது அட்ரினலின் என்கிற ஹார்மோன் சுரந்து இதயத்திற்கு செல்கிற இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்து மாரடைப்பிற்கு காரணமாகிறது.

கோபத்தில் செய்யக்கூடாதவை

  1. கோபத்தில் உங்கள் துணையை விமர்சிக்காதீர்கள்
  2. என்னதான் கோபம் தலைக்கேறினாலும் துணையை மோசமான, தகாத வார்த்தைகளால் திட்டாதீர்கள் வன்முறையை பிரயோகிக்காதீர்கள்.
  3. பிரிவை சொல்லி மிரட்டாதீர்கள்.

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி

ஒரு பிரச்சனை வரும் போது அதில் தனது உரிமை எப்படி மீறப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இதற்கு முன் அதே போன்றதொரு சம்பவம் நடந்து இருக்கிறதா என பார்த்து கோபத்துக்குக் காரணமான அந்த கொக்கியை கடிக்கலாமா கடித்தால் என்ன ஆகும் என்றும் யோசிக்க வேண்டும்

தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் வித்தியாசத்தை உணர வேண்டும். பிரச்சினைக்கு காரணமான விஷயம் தேவை நிறைவேற்றப்படாத தன் விளைவால் வந்ததா அல்லது விருப்பம் நிறைவேற்றப்படாததால் வந்ததா என்கிற தெளிவு வேண்டும்.

கோபத்தை தூண்டுகிற விஷயம் உண்மையிலேயே கோபப்பட தகுந்தது தானா என பார்க்கவேண்டும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக கோபப்படுவது, அன்யோன்யமான வாழ்க்கையை வாழ்வதற்கு தடையாக மாறும் என்பதை உணர்ந்தால் அதைத் தவிர்க்கலாம்.

துணையிடம் மனம் திறந்து பேசுவது தான் ஒரே சிறந்த வழி. கணவனும் மனைவியும் அமைதியாக உட்கார்ந்து, மனம் திறந்து பேச பழகினால், அந்த குடும்பமே ஆரோக்கியமான சூழல் கொள்ளும். அதை பார்த்து வளர்கிற குழந்தைகளும் நாகரீகமான மனிதர்களாக வளருவார்கள். பிரச்சினையை சொல்லி முடித்த திருப்தி துணைக்கு ஏற்படும். இப்படிப் பேசும்போது இடையிடையே சட்டென கோபப்படுவது, பழைய பிரச்சினைகளை கிளறுவது போன்றவற்றை தவிர்ப்பது முக்கியம்.