காதல் ஒரு அதி அற்புத உணர்வு, எல்லோருக்கும் ஒரு கலவையான உணர்வாகவே அது இருந்து வந்துள்ளது. காதல் மட்டும் தான் நமக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மகிழ்ச்சியையும், அதேநேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வலியையும் ஒருசேர தந்திடும். நம்மளை கலர் கலராய் கனவு காண வைப்பதில் தொடங்கி ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் தரம், சுயசிந்தனை, எதிர்கால கட்டமைப்பு என எல்லாவற்றையும் மேம்படுத்தி ஒரு புதிய மனிதராகவே மாற்றிவிடும்.

எல்லாருமே காதல் என்பது ஒரு கனவுலகம் என்று சொல்லுவார்கள். இங்கே பல காதலோட பிரிவுக்கும் முறிவுக்கும் காரணமாக இருப்பதே நமக்கு இருக்கின்ற நடைமுறை சிக்கலை பற்றி யோசிக்காமல் இருப்பது தான். மேலும் காதலை பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதாலும் தான். காதல் கைக்கூடும் வரை செய்யும் நாம் மெனக்கெடல்கள் அதன் பிறகு கண்டுகொள்ளபடுவதில்லை.

சிறந்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி, துணையின் எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் இருக்கும், அவரை எப்படி நிறைவுற செய்வது, என்ன காரணங்களுக்காக கூட பிரிவுகள் நேரலாம், பிரிவு வராமல் எப்படி காப்பது முதலிய விஷயங்களை பற்றி அலசி ஆராய்ந்து மிக சிறந்த கட்டுரைகளை நூல் வடிவில் தந்திருக்கிறார்.

கட்டுரை என்று சொல்லப்பட்டாலும் சுவாரஸ்யத்திற்கும், எண்ண ஓட்டத்திற்கும் எங்கேயும் இடையூறு இல்லாமல் பதியப்பட்டுள்ளன.
எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல் பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அணுகுவது மட்டுமின்றி உளவியல் ரீதியிலாக அணுக வேண்டும் என்பது ஆசிரியரின் கருத்து.

ஆண் மற்றும் பெண்ணின் உணர்வுகள் குறித்த புரிதலை இப்புத்தகம் அளிக்கிறது. மேலும் காதல் வயப்பட்ட பெண்ணின் குணாதிசயங்களை அவளின் செய்கைகள் மற்றும் சமிஞ்கைகள் மூலமாக அழகாக வடித்திருக்கிறார் ஆசிரியர்.

காதல் குறித்தான நம் புரிதலே அதன் வெற்றிக்கும், தோல்விக்குமான காரணங்களாக அமைகிறது. அன்பு கொண்ட மனமும் சிறிது புரிதல், சிறிது மொழிதல், சிறிது ஊடல், சிறிது கூடல், மற்றும் கொஞ்சம் பொறுமையும் இருந்தால் நம் காதல் வாழ்க்கை அழகாக அமைந்துவிடும்.