பாவேந்தர் பாரதிதாசனின் கவிச்சாரலில் உருவான அருமையான கதை. இளம் காதல் ஜோடிகளின் புனிதமான அன்பினை வெளிப்படுத்தும் அற்புதக் காதல் கதை. சாதி வேற்றுமையின் காரணத்தால் காதலுக்கு ஏற்பட்ட கொடுமையினை விளக்கும் துன்பியல் கதை. முழுக்க முழுக்க கவி நடையிலேயே அமைந்துள்ள இக்கவி புத்தகத்தை வாசிக்கும்போது தமிழ் மணம் உள்ளமெங்கும் பரவுகிறது. இந்நூலின் முதலாம் பகுதியின் ஆரம்பத்தில் காதல் வானில் பயணித்து, இரண்டாம் பகுதியில் சிறிது ஆன்மிகச் சாரலில் நனைந்து, இறுதியில் நம்மளை கண்ணீர்க் கடலில் நீந்த வைக்கிறது.

கதைச்சுருக்கம்: நாயகி பூங்கோதையின் மீது காதல் நினைவாகவே உள்ள தன்னுடைய மகன் பொன்முடியை வடநாட்டுக்கு அனுப்புகிறார் அவனது தந்தை மான நாய்கன். பூங்கோதையும் அவனுடைய பிரிவு தாளமுடியாமல் அவனைக் காண வடநாடு செல்கிறாள். வடநாட்டில் ஆரியர்கள் யாகத்திற்குப் பொருளுதவி கேட்க, அந்த யாகத்தை இழிவாகப் பேசுகிறார்கள் பொன்முடியும் மற்ற தமிழர்களும். இதனால் ஆத்திரம் அடைந்த ஆரியர்கள் இவர்களைக் கொலை செய்து பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய பொன்முடி தன்னைத் தேடிக் கொண்டிருந்த பூங்கோதையை எதிர்பாராத விதமாகச் சந்திக்கிறான். இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திப்பதால் ஆர்வ மிகுதியால் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவும் வேலையில், பொன்முடியை கொலை செய்ய துரத்தி வந்த ஆரியன் வடவன் சயந்தன் மறைவிலிருந்து வாளை வீசிப் பொன்முடியை வீழ்த்துகிறான்.

இக் கதையை தழுவி 1949 ஆம் ஆண்டு ‘பொன்முடி’ என்னும் தலைப்பில் திரைப்படம் வெளிவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எல்லீஸ் ஆர்.டங்கன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அதுவரை தமிழ் சினிமாவில் பேசி வந்த, பிராணநாதா, சுவாமி, சகியே என்னும் சொற்களை தவிர்த்து, நல்ல தூய தமிழில் அத்தான், தோழி, குருவே என்னும் வளமான தமிழில் வந்த முன்னோடி படமாக பொன்முடி அமைந்தது. தமிழின் சிறப்பும் காதலின் உயர்வும் ஒருங்கே அமைத்து உருவாக்கப்பட்ட பொன்முடி திரைப்படத்தில் பெரியாரின் பகுத்தறிவு கொள்கை கலந்த வசனங்கள் இடம் பெற்றன.

தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த அரும்பெரும் படைப்புகளில் ஒன்றாக ‘எதிர்பாராத முத்தம்’ திகழ்கிறது.

Read/Download this PDF Book